கடைசிப் பல்லவன்

என் பார்வையில் இந்த உலகம்....!!!

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

உனக்காக...


உன்னிடத்தில்
சொல்லிய வார்த்தைகளை விட
சொல்லாத வார்த்தைகள்
அதிகமுள்ளன என்னிடத்தில்.

சொல்ல வந்து முடியாமல் விட்ட
அவையாவும்
சேர்த்து வைக்கப்பட்டுள்ளன
பழைய அஞ்சல்தலைகள் போல.

காலம் கடக்க கடக்க
அவற்றின் மதிப்பும்
கூடிக்கொண்டே செல்கிறது.
மீண்டும் மீண்டும் அவை நினைவுபடுத்துகின்றன
பேசாமல் விட்ட துக்கத்தின் வலியை.

சேர்த்து வைத்த எல்லா சொற்களும்
ஆழ்மனதின் ஓரத்தில் ஓர் அறையில்
வீழ்ந்துகிடக்கின்றன
வீசி எறியப்பட்ட
வாழைப்பழத் தோல் போல.

என்றாவது ஒருநாள்
அவ்வறை திறக்கப் படலாம்.
சேர்த்து வைத்த வார்த்தை யாவும்
உன்னைத் தேடி வரலாம்.
அந்த நிமிடம் நான்
இறந்தும் கூட இருக்கலாம்..!!

காத்திருக்க நேரமில்லை

















நம்மில் யாருக்கும்
காத்திருக்க நேரமில்லை
உண்மையில்
நாம் யாரும் காத்திருக்க விரும்புவதில்லை..
காதலிக்கும் போதும்
காதலிக்கப்படும் போதும் தவிர..
ஆனாலும்
சாலைகளில் பேருந்து நிறுத்தத்தில்
அலுவலகத்தில் ரயில் நிலையத்தில் எனக்
கரையில் நாம் நிற்கும்போதே
பிறந்தோடிக்கொண்டிருக்கும் நதியைப் போல
அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்
அவரவர்க்கான கடலைத் தேடி..!!
எல்லாப் பேருந்துகளும் சென்றபின்னும்
காத்திருக்கின்றனர் யாரோ சிலர்
யாருக்காகவோ காத்திருந்தபடி..
நம் எல்லோருக்கான பேருந்துகளும்
எப்போதும் ஒன்றாகவே வருவதில்லை.
ஆனாலும் அவரவர்க்கான பேருந்துகள் மட்டும்
தாமதமாகவே வருகின்றன எல்லோருக்கும்...!
இருந்தாலும் காத்திருக்கிறோம்
இதுவரை வந்திருக்காத
எல்லோருக்குமான பேருந்திற்காக
எல்லோரும்...!!

குழப்பம்...!!!

ஒவ்வொரு நாளும்
குளிக்க ஆரம்பிக்கும் முன்
குழப்பமாகவே இருக்கிறது....
எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில்..!!!


வித்தியாசமாய்...!!!

எல்லோரையும் போலவே பிறந்து
எல்லோரையும் போலவே வாழ்ந்து
எல்லோரையும் போலவே இறக்கவும் வேண்டாம்...
என யோசித்துக்கொண்டே இருக்கிறேன்
எல்லோரையும் போலவே...!!!


நேரம்...!!!

கையில் இருந்து நழுவிக்கொண்டே இருக்கிறது...
இருந்தும்
பிடிக்க முடியவில்லை நேரத்தை..!!
கடிக்கார முள் சத்தம்...!!!

இந்த நாள்...!!!

எல்லா நாளையும் போல்
இந்த நாளும் இருக்கக் கூடாதென்று
எழுந்தேன்..!!
இந்த நாளும் முடிந்துப் போயிருந்தது
எல்லா நாளையும் போல...!!
இந்த நாள் இன்னுமொரு நாள்..!!


காதல்...!!!

எல்லா நதிகளும் கடலை நோக்கிப் பாயும்
என்ற கூற்றுப் பொய்யானது..
பின்னென்ன
என் காதல் நதி மட்டும் எப்போதும் உன்னை நோக்கியே
பாய்கிறது....!!!


உறக்கம்...!!

எல்லா ஞாபகங்களையும் மறந்து விட்டுப்
படுக்கையில் விழுந்தேன்...
எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
எப்போதோ மறந்ததாய் நினைத்த
எல்லா ஞாபகங்களும்....!!!

குளியல்...!!!

குளியல் அறையிலிருந்து வெளியே வந்தேன்...
சுத்தமாகியிருந்தது...
மனது...!!!


அம்மா...

ஊர் சென்றுத் திரும்பியபின்
அணிகின்ற ஒவ்வொரு துவைத்த ஆடையிலும்
கொஞ்சமாய் மிச்சமிருக்கிறது அம்மாவின் வாசம்...!!!


நான் ரசித்த சில கவிதைகள்





பழைய மன்னருடன் நகர்வலம்
வந்ததாய்ச் சொல்லப்பட்ட
பாகனற்ற கிழ யானை
பட்டத்து ஒப்பனையோடும்
ஓசையற்ற சலங்கையோடும்
தெருவில் இறந்து கிடந்தது...!!!

---- யாத்ரீகன் by முனியப்பராஜ்




-- நன்றி

மேற்கூறிய அனைத்து கவிதைகளுக்கும்
சுஜாதாவிற்கும் ( கற்றதும் பெற்றதும் )
விகடனுக்கும்...!!!

தனிமை நம்மை எப்போதும் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது

தனிமை நம்மை எப்போதும்
பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது.

நாம் மறக்க நினைக்கும் சில நிகழ்வுகளையும்
நாம் மறந்துப்போன சில நிகழ்வுகளையும்
நாம் மறக்க வியலா சில நிகழ்வுகளையும்

அது நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
நாம் தனியாக இருக்கும்பொழுதேல்லாம்...!

தனிமை நம்மை எப்போதும்
பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது.

நமக்கு மிகவும் நெருங்கியவரின் மரணம்
நாம் மிகவும் நேசித்தவரின் பிரிவு
நம்மை மிகவும் விரும்பியவரின் இழப்பு என

அது நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
நாம் தனியாக இருக்கும்பொழுதேல்லாம்...!

உறக்கம் வராத இரவுகளிலும்
ஊரடங்கிய பின் வரும் விழிப்புகளிலும்
உறங்கமுடியாத பல பயணங்களிலும்

தனிமை நம்மை எப்போதும்
பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது.

நெரிசல் மிகுந்த நகரத்துப் பேருந்துகளில்
குழுவை மதுவருந்தும் நண்பர்கள் குழாமில்
நீண்ட நாட்களுக்குப் பின் செல்லும் ஊருக்கான ஒற்றையடிப் பாதையில் என

தனிமை நம்மை எப்போதும்
பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது.

வெளிஉலகை எதிர்கொள்ள பயப்படுதல்
உள்மனதை ஒதுக்கிச்செல்ல தயங்குதல்
ஒதுக்கவியலா வாழ்வின் சில அபத்தங்களை அரங்கேற்றுதல் என

அது நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
நாம் தனியாக இருக்கும்பொழுதேல்லாம்...!
தனிமை நம்மை எப்போதும்
பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது...!!!

--- பாரதிப்ரியன்

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பிறந்த தினம்



இன்றைய தமிழின் முக்கிய இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மனுஷ்யபுத்திரன் அவர்கள் நேற்று தனது 43 - வது பிறந்த நாளை கொண்டாடினார். காலையிலிருந்து முயற்சி செய்த பின்னர் ஒரு வழியாக, சுமார் காலை 10:30 மணிக்குதான், கைபேசியில் கிடைத்தார்.
வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின் நாம் ஒரு முறை நேரில் சந்திப்போமே என்றார். வழக்கமான எழுத்தாளர்களைபோல் அல்லாமல், சாந்தமாக (எப்போதும்போல்) பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்காக அவரது பிரபலமான கவிதை ஒன்று இங்கே:
_____________________________________________________________________

நாம் ஏன் இப்படி

இருக்கிறோம்

சதா முணுமுணுத்துக்கொண்டு

எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு

எதையாவது சுத்தம் செய்துகொண்டு

யாரையாவது சபித்துக்கொண்டு

எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு

எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு

எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு

ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு

தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு

யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு

ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு

கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு

நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு

நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு

கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு

மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு

பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு

புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு

சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு

எப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு

சிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு

அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு

யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு

நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு

முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு

குடிக்கும்போது அழுதுகொண்டு

புணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு

அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு

சிறுவர்களையும் சிறுமிகளையும் ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு

பௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு

எதையாவது தொலைத்துக்கொண்டு

எதையாவது தேடிக்கொண்டு

தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு

தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு

யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு

யாரையாவது இணங்கச் செய்துகொண்டு

கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு

சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு

பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு

தன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு

கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு

போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு

எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு

தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு

மற்றவர்களின் கடமைகளை நினைவூட்டிக்கொண்டு

நமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு

பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு

யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு

உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு

மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு

யாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு

பொது அறிவை வளர்த்துக்கொண்டு

எதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு

சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு

நிழல்களுக்குப் பயந்துகொண்டு

எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு

உடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு

எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு

தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு

அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு

புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு

திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு

வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு

நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு

ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு

வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு

யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு

எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு

எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு

எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு

சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு

மன்னிக்க முடியாதவற்றை

மன்னித்துக்கொண்டு

நாம் ஏன்

இப்படி இருக்கிறோம்.



பி.கு:
கவிதைக்கு நன்றி: http://www.sramakrishnan.com/

குழந்தைகள்...!!!


கோபமாக..!!
ஆச்சர்யமாக...!!
ஆசையாக..!!
மகிழ்ச்சியாக..!!
வருத்தமாக..!!
அமைதியாக..!!
எனப் பார்க்கின்ற நாம் எப்படிப் பார்த்தாலும்
எல்லாக் குழந்தைகளும் என்னவோ
அழகாக மட்டுமே தெரிகிறார்கள்..!!!

நான் எப்பொழுதும் மறக்காத வரிகள்..!!!

தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுளன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ..!!!

--மகாகவி பாரதியார்.

எதிர் பாராமல் உதித்தது

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
தினமும் வந்தே செல்கிறார்கள்...
நம் எல்லோரது கனவிலும்
யார் யாரோ...!!!

சும்மா யோசிச்சது..!!!

பவுர்ணமி நாள்..!!
நிலவை காண்பித்து உணவூட்டிநேன்..!!!
வெளியே வந்தும் மறைந்தும் விளையாட்டு காட்டியது
நிலவும் தன் பங்குக்கு..!
பாதிச் சாப்பாட்டில் மகன் உறங்க
கதவடைத்து நானும் சென்றேன் படுக்கைக்கு..!!
காத்திருந்தது நிலா மட்டும் அடுத்த நாளுக்காக...........!!!

Prithivi

மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.

தமிழின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவரான திரு.மனுஷ்யபுத்திரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை 06:30 மணிக்கு, சென்னை மவுண்ட் ரோடு - இல் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் வாருங்கள்.

மனுஷ்யபுத்திரனின் சார்பாக இது அடியேனின் விண்ணப்பம்.

கீழே அவரது விண்ணப்பம்:
----------------------------------------------------------------



அன்பு நண்பர்களே

என்னுடைய ஏழாவது கவிதைத் தொகுப்பு ‘ இதற்கு முன்னும் இதற்குப் பிறகும்’ கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை வெளிவர இருக்கிறது. எனது புத்தகம் ஒன்றிற்கு தனிப்பட்ட முறையில் நடைபெறும் முதல் கூட்டம் இது.

இதுவரை வெளி வந்த எனது தொகுப்புகளிலேயே இதுதான் பெரியதும் குறுகிய காலத்தில் எழுதபட்டதுமாகும். 11 மாதங்களில் 126 கவிதைகள். படைப்பு நிலையின் உச்சத்தில் இடையறாது கனன்ற காலம் இது. இந்தத் தொகுப்பு வெளிவரும் நாளில் எனது நண்பர்கள், உயிர்மை, உயிரோசையின் படைப்பாளிகள், வாசகர்கள் என்னோடு இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் தொடர்ந்து எழுத ஆசைப்படுகிறேன். உங்கள் அன்பும் வாழ்த்தும் இல்லாமல் அது சாத்தியமில்லை.

சந்திப்போம்

மிக்க அன்புடன்

மனுஷ்ய புத்திரன்

manushyaputhiran@gmail.கம


நன்றி: உயிரோசை மின்னிதழ்.
http://www.uyirmmai.com/uyirosai/Default.aspx?edtypeid=2

எனக்குப் பிடித்த நான்கு வரிகள்..!!!

நான் எழுதியதிலேயே எனக்குப் பிடித்த நான்கு வரிகள்:


பசியாய் பட்டினியாய் பாவப்பட்ட பிறவிகளாய்
பஞ்சப்பட்டு வாடும் இந்த பரிதாப ஜீவன்களை
பச்சோந்தி கூட்டம் பகடையாட எத்தனை
பத்து நிமிட நாடகங்கள் பாராளுமன்றத்தில் அரங்கேற்றம்!!!

--பாரதி பிரியன்